அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


 

அவர்களைப் பற்றி........

திருமூலர், திருவள்ளளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வருபவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911-ஆம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே அவருக்குக் கடவுள் யார்? உயிர் என்றால் என்ன? வறுமை எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. பல ஆண்டுகள் மேற்கொண்ட அயரா ஆராய்ச்சியின் வாயிலாக இக்கேள்விகளுக்கான விடையைத் தானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி வருகிறார்.
சுய முயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர் தியான முறைகளில் சிறந்ததான எளிய முறைக் குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர்கள் கண்ட நெறியான காயகற்ப யோகம் - இவை இணைந்த வாழ்க்கை நெறியைப் போதித்து, மனிதகுலம் உய்ய அருட் தொண்டாற்றி வருகிறார்.
மேலும் காந்தத் தத்துவத்தின் மூலம் தெய்வநிலை, உயிர்நிலை, அறிவுநிலை இவற்றைப் பொது அறிவு படைத்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி வருகிறார். மனிதகுல நலனுக்குக் தேவையான கருத்துகளை எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலநூல்களை எழுதி விளக்கி வரும் மகரிஷி அவர்கள் சுமார் ஆயிரத்து ஐந்தூறுக்கும் அதிகமான கவிகளையும் இயற்றியுள்ளார்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவியிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மையை மேற்கொண்ட மகரஷி அவர்கள் தமது 81 வயதிலும் உலக சமாதானத்திற்காக அயராத சேவை புரிந்து வருகிறார். பல வருடங்களாக வௌருநாடுகளுக்கும் சென்று ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.
தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.
மகரிஷி அவர்கள் வெளிருயிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்தோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் வாழும் உலகில் விஞ்ஞானம் மென்மேலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவுக்கு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை (வசதி) பொருட்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் குழப்பமும், சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் குடும்ப வாழ்வில் அச்சமும், குழப்பமும் சூழ்ந்திருக்கிறது.
இந்த குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை நெறியும்தான் தனிமனிதனையும் மனிதகுலத்தையும் குடும்பத்தையும் காக்கவல்லது. உயிரின் மதிப்புணர்ந்து மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத் தன்செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க தெளிவும் பயிற்சியும் பழக்கமும் மனவளக்கலை என்றபோதனை கலந்த சாதனைகளால் தான் கிட்டும்.
செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இது முதலில் தெரியும் போது இனிமேல் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வருகின்றது தவறிழைப்பது மனம். இனி தவறு செய்துவிடக்கூடாது என தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.
மனத்தின் உயர்வு எதுவோ அதுவே மனிதனின் உயர்வு. ஆகவே மனத்தை எந்த அளவில் உயர்த்திக் கொள்கிறமோ, தெளிவுபடுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிலே தான் மனிதனுடைய வாழ்வும் குடும்பத்தின் நலனும் உயரும்.

மனவளக்கலையின் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி விவரம்-

1. உடலை பாதுகாக்க - எளியமுறை உடற்பயிற்சி
2. மனதை வளப்படுத்த- எளியமுறைதியானப்பயிற்சி
3. உயிரை நீண்ட ஆயுளாக்க- காயகல்பப்பயிற்சி
4. குணத்தை மேம்படுத்த- தற்சோதனைப்பயிற்சி

மன்றங்களில் முக்கியமாகப் போதிக்கும் பயிற்சிகள்

  1. எளியமுறை உடற்பயிற்சி
  2. தியானப்பயிற்சி
  3. காயகல்பப்பயிற்சி
  4. மூச்சுப்பயிற்சி
  5. அகத்தவப்பயிற்சி
  6. சீவகாந்தப்பயிற்சி

இப்பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்

  1. நோய் இன்றி வாழலாம்
  2. சினத்தை தவிர்க்கும்
  3. மன் உளைச்சலை நீக்கும்
  4. கவலையை ஒழிக்கும்
  5. தீய பண்புகளை நீக்கி, ஒழுக்கத்தை ஏற்படுத்தும்
  6. இறை உணர்வை ஏற்படுத்தும்
  7. மனம் அமைதி பெறும், மகிழ்ச்சி ஏற்படும்
  8. அதிக ஞாபக சக்தி ஏற்படும்
  9. மாணவ/மாணவியர்கள் கல்வியில் சிறப்படைவர்

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இருபாலரும் கற்கலாம்.

 

இந்த அரிய கலையை அனைவரும் பயின்று நலமுடனும், வளமுடனும், மகிழ்வுடனும் வாழ உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

Contact us